Рет қаралды 215
Quiet Time எவ்வளவு நேரம் செய்ய வேண்டும்?
நமது நேரத்தின் அடிப்படையில் எவ்வளவு நேரம் தியானத்தில் அமர முடியும் என்பதை தனி நபர் தான் முடிவு செய்ய வேண்டும். ஒரு மணி நேரம் ஓரளவு போதுமானதாக இருக்கும். ஒருவேளை ஒருவர் ஒரு நாளில் அரை மணி நேரம் தான் ஒதுக்க முடியும் என்றால்
10 நிமிடங்கள்: தியானம்
10 நிமிடங்கள்: துதி, நன்றி, ஆராதனை
10 நிமிடங்கள்: ஜெபம் …. இப்படி நேரம் ஒதுக்கலாம்.
வேலைப் பளு நேரங்களில் பத்து நிமிடங்கள் மட்டுமே ஒதுக்க முடியும் என்றால் ஒவ்வொரு பகுதிக்கும் 3 நிமிடங்கள் என பிரிக்கலாம்.
தின தியானம் ஆரம்பிக்கும் நிகழ்வில், குறைவான நேரம் ஒதுக்கி, நாள் ஆக, நாள் ஆக நேரத்தைக் கூட்டுவது நல்லது.
நான் வேதத்தை பல முறை வாசித்து விட்டேன். எனக்கு தனி தியானம் அவசியமா?
வேதத்தை வாசிப்பது வேறு, தியானிப்பது வேறு, ஆராய்ச்சி செய்வது வேறு.
எத்தனை முறை வேதத்தை வாசித்திருந்தாலும், தியானம் என்பது மிக மிக அவசியம். வேதத்தை வாசிப்பது முழு வேதத்தைக் குறித்த தெளிவு தரும். ஆனால் தியானம் என்பது ஒரு வசனம் அல்லது இரண்டு வசனங்களை எடுத்து அதன் அர்த்தம் தெரியும் வரை பல்வேறு கேள்விகள் கேட்டு,
அந்த வசனத்தைப் புரிந்து கொள்வது ஆகும், இந்த தியானத்தில் தான் வேதம் கண்ணாடி போல் நம்மைக் காட்டும். தனிப்பட்ட முறையில் தேவ சத்தம் கேட்க தியானம் அவசியம்
Quiet Time செய்ய என்னென்ன வேண்டும்?
தியானத்திற்கு பரிசுத்த வேதாகமம், குறிப்பேடு, பேனா ஆகிய மூன்றும் போதும்.
இதற்காக குறிப்பிட்ட நேரம் ஒதுக்குவது மிகவும் அவசியம்
Dakes Bible, வாழ்வியல் விளக்க வேதாகமம் போன்ற study Bibles பயன்படுத்தி இனி குறிப்பு எடுக்கிறேன், இது போதும் தானே?
ஆராய்ச்சி வேதங்களைப் பயன்படுத்துவது நல்லது. ஒரு வசனத்தைப் பற்றிய விளக்கம், பிண்ணனி, யூத கலாச்சாரம், அக்கால வரலாற்று அட்டவணை போன்றவற்றை அறிய இது போன்ற ஆராய்ச்சி வேதங்கள் உதவும்.
தியானம் என்பது தேவன் நம்மோடு பேசுவது. மற்றவர்களோடு தேவன் எப்படி எல்லாம் பேசி இருக்கிறார், வேத வெளிப்பாடுகள் தந்திருக்கிறார் என்பதை இரட்சிக்கப்பட்ட ஆரம்ப நிலையில் தெரிந்து கொள்வது அவசியம்.
வளர, வளர தேவன் நம்மோடு பேசி, நமக்கும் அதே வெளிப்பாடுகள் தர ஆவலோடு இருக்கிறார் என்பதைப் புரிந்து, தியானத்தில் ஆரம்பிக்க வேண்டும். இந்த தியானம் தான் பின் நாட்களில் முழு வேதம் பற்றிய வெளிச்சத்தையும், பல்வேறு உபதேசங்களையும் நமக்கு புரிய வைக்கும்.
ஒரு வாரம் நன்றாய் தியானிக்கிறேன், பிறகு வேலை அதிகமாகி, நேரம் இல்லாததால் தியானிப்பதை தொடர முடியவில்லை. இது தான் எல்லாருக்கும் நடக்கிறதா?
தியானம் ஒரு ஒழுங்கு. பொதுவாக தியான ஒழுங்கை தினமும் கடைபிடிக்க ஆரம்பிக்கும் போது, திடீரென வரும் பயணம், அல்லது வேலை காரணமாக ஓரிரு நாள் தடைபட நேரிடும்.
அதைத் தொடர்ந்து ஒரு சோர்வு வருவது இயல்பு. வேலைப் பளு காரணமாக தியானம் தடைபட்டால் அதற்காக கவலைப்படத் தேவையில்லை. மீண்டும் ஆரம்பிப்பதில் தான் நமது வைராக்கியம் இருக்க வேண்டும்.
Quiet Time செய்ய எந்த நேரம் சிறந்தது? காலையா ? மாலையா? இரவா?
தனி தியானம் அவரவர் சூழ்நிலையைப் பொறுத்து முடிவு செய்வது ஆகும். ஒருவருக்கு காலை தான் தியானம் செய்ய முடியும், ஒருவருக்கு இரவில் தான் முடியும்.
அவரவர் வசதிப் படி தியான நேரத்தை அமைத்துக் கொள்ளலாம். ஆனால் அதிகாலை நேரம் தனி தியானத்திற்கு மிக நேர்த்தியான நேரம். ஆண்டவர் இயேசு கிறிஸ்து அதிகாலையில் தேவ பாதத்தில் அமர்ந்திருக்கிறார்.
அவர் அதிகாலையில், இருட்டோடே எழுந்து புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்குப்போய், அங்கே ஜெபம்பண்ணினார். (மாற்கு 1:35)
Quiet Time என்றால் சில கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். அவ்வளவு தானே? பதில் கிடைக்காவிட்டால் என்ன செய்வது?
கட்டாயம் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
அந்த வசனத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவ்வளவு தான்.
ஒரு சில வசனங்களில் ஒரு கேள்விக்கு மட்டுமே பதில் இருக்கும். அதை மட்டும் குறிப்பிட்டால் போதும்
மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார்.
மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார். (மத்தேயு 6:14,15)
1. தியானம்: கேள்விகள்:
1. இந்த வசனத்தில் கர்த்தருடைய நாமம் : பிதா, பரம பிதா (பரமண்டலங்களில் இருக்கிற பிதா)
2. பின்பற்ற வேண்டிய மாதிரி : கர்த்தராகிய இயேசு கிறிஸ்து (நமது பாவங்களை மன்னித்திருக்கிறார்- நாமும் மன்னிக்கும்படி)
3. இந்த வசனம் சுட்டிக்காட்டும் பாவம் : மன்னிக்காமல் இருப்பது
4. கீழ்ப்படிய வேண்டிய கட்டளை : நான் மன்னிக்க வேண்டும்
5. உரிமை பாராட்ட வேண்டிய வாக்குத்தத்தம்: பரம பிதா என்னை மன்னிப்பார்
2. துதி, நன்றி செலுத்துதல்:
துதிக்க வேண்டிய கர்த்தருடைய நாமம்: பிதா, பரம பிதா, பரலோத்தில் இருக்கும் பிதா
நன்றி சொல்ல வேண்டிய காரியம்: பாவிகளில் பிரதான பாவியாகிய என்னை கர்த்தர் மன்னித்திருக்கிறார். எனது அத்தனை பாவங்களையும் ஒன்று விடாமல் மன்னித்திருக்கிறார்
3. இந்த வசனத்தின் அடிப்படையில் ஜெபிக்க வேண்டியவை:
கர்த்தாவே மற்றவர்களை மன்னிக்க வேண்டும் என்ற இந்த சத்தியத்திற்கு நான் கீழ்ப்படிய எனக்கு உதவி செய்யும்
இந்த பேப்பரில் எழுதியுள்ள நபர்களை உமது சமூகத்தில் மன்னிக்கிறேன்
நான் நேரில் அவர்களை சந்திக்கும் போது மன்னிப்பு கேட்க உதவி செய்யும்
மற்றவர்களை மன்னித்தால் தான் என் பாவம்/ குற்றம் மன்னிக்கப்படும் என்ற சத்தியத்தை ஒரு நாளும் நான் மறந்து விடாதிருக்க உதவி செய்யும்