Рет қаралды 2,607
தி கார்டியன் இதழில், 22 டிசம்பர் 2020 அன்று ஓர் மருத்துவ ஆய்வறிக்கை வெளியாகியது. தாயின் கருப்பையில் வளரும் குழந்தையின் தொப்புள்கொடியில் நுண்நெகிழிகள் இருப்பதற்கான தடையத்தை இத்தாலியைச் சேர்ந்த மருத்துவ ஆய்வறிஞர்கள் முதன்முதலாகக் கண்டறிந்திருப்பது பற்றிய அதிர்ச்சித்தகவல் அது. ரோமில் இருந்த ஓர் மருத்துவப் பல்கலைக்கழகம் இந்த ஆய்வினை நிகழ்த்தியிருந்தது. மனிதக்கரு உருவாகி வளரும்பொழுதே அது தன்னுள் நுண்நெகிழியைக் கொண்டிருப்பது ஆய்வுப்பூர்வமாக உலகின் பார்வைக்கு நிறுவப்பட்டது.
பூமியில் வந்து இன்னும் பிறக்காத ஓர் உயிருக்குள் மனிதயினம் பயன்படுத்தித் தூக்கியெறிந்த நெகிழியின் நுண்துகள்கள் எப்படி சென்றடைந்திருக்கும்? என்கிற கேள்விக்கு 'தாயின் இரத்தவோட்டம் வழியாக' எனப் பதிலளிளக்கிறது அந்த ஆய்வு. தொப்புள்கொடி என்பது ஓர் குழந்தைக்கு எவ்வளவு இன்றியமையாத ஒன்று என்பதை எவருக்கும் எடுத்துச்சொல்லத் தேவையில்லை. குழந்தைக்கான இரத்தமும் உணவும் தொப்புள்கொடி வழியாக எடுத்துச்செல்லப்படுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, குழந்தையின் நோயெதிர்ப்பு மண்டலத்தை உருவாக்கி வளர்த்தெடுப்பதில் முதன்மைப்பங்கு வகிப்பது இக்கொடிதான்.
அத்தகைய ஒரு அரிய உறுப்புவரை நெகிழியால் ஊடுருவ இயலுமென்றால், உண்மையில் நாம் எதைநோக்கி இம்மானுடத்தை இட்டுச்செல்கிறோம்? 'இனி பிறக்கும்பொழுதே ஒவ்வொரு குழந்தையும் நெகிழியோடு பிறக்கும்' என்கிற செய்தியை எப்படி பாராமுகமாகக் கடந்துசெல்வது? உணவோ, உடற்தோலோ, மூச்சுக்காற்றோ... ஏதோவொன்றின் வழியாக நுண்நெகிழிகள் நம் உள்ளுறுப்புகளை ஆக்கிரமிக்கத் தொடங்கியது மட்டுமில்லாமல், இன்னும் பிறவாத தலைமுறைக்கும் அச்சுறுத்தலென மாறிவிட்டது. அடுத்த தலைமுறைக் குழந்தைகளைப் பொறுத்தவரை நாம்தான் அவர்களுக்குள் நெகிழியைக் கொண்டுசெல்கிற கடத்திகள்!
அந்த ஆய்வறிக்கையின் ஒருவரி, "கருக்குழந்தை என்பது பொதுவாக கரிமச்சேர்மானங்களின் கூட்டு(Organic entities). ஆனால், இப்பொழுது அது கரிமச்சேர்மானங்கள் மற்றும் கரிமமற்ற செயற்கைப் பொருட்களின் கூட்டு (Inorganic entities) என்ற நிலைக்கு மாறிவருகிறது" என்கிறது. அதாவது, நம் உயிரியலின் அடிப்படை அமைப்பில் அயல்பொருளொன்றின் தாக்குதல் துவங்கியிருக்கிறது என்றே இதற்கு அர்த்தம்.
இத்தகு அச்சுறுத்தல்கள் நிறைந்த நெகிழிக்கு எதிரான மற்றும் அதற்கு மாற்றான சூழலியல் சார்ந்த பயணம்தான் தோழமை விஷ்ணுப்ரியாவின் செயல்களும் முன்னெடுப்புகளும். உயர்தரக் கல்லூரியில் கட்டிடக்கலை வடிவமைப்பியல் படித்துமுடித்து, வெளிநாட்டில் மேற்படிப்புக்காகத் தேர்வெழுதி தேர்வாகியிருந்த சூழலில், அத்தனையையும் உதறிவிட்டு 'கழிவு' என்னும் கருப்பொருளை தன் வாழ்வுக்கான செயற்களமாக ஏற்று செயலாற்றிக் கொண்டிருக்கிறார் விஷ்ணுப்ரியா.
தற்காலச் சூழலியலில் மிக முக்கிய அறிஞர்களான பால் கால்வெர்ட், சுனிதா நாராயணன், ராஜேந்திர சிங், சோனம் வாங்சுக், வேலூர் ஸ்ரீநிவாசன் உட்பட நிறைய ஆளுமைகளிடம் கலந்துரையாடி, அவர்களின் அனுபவங்களையும் அறிவுரைகளையும் ஆவணப்படுத்தி, இந்தியாவில் 'கழிவு மேலாண்மை' சார்ந்த முன்னெடுப்புக்குத் துணையாக 'மீள்' எனும் ஆவணப்படத்தை உருவாக்கி இருக்கிறார். சூழலியல் சார்ந்த தீர்ப்புகளுக்கான அறிவுத்திரட்டு என இதைக் குறிப்பிடலாம். அந்த ஆவணப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இன்றைய இளையதலைமுறை கல்லூரி மாணவர்களிடம் 'கழிவு மேலாண்மை' சார்ந்த உரையாடலை முன்னெடுத்துப் பரப்புரை செய்வதில் விஷ்ணுப்ரியாவின் வாழ்வும் பயணமும் வழிப்பட்டுள்ளது. சூழலியச் சிக்கல்களை மட்டுமே மையப்படுத்தி பேசாமல், அதற்கான தீர்வுகளுக்கும் மாற்றுவழிகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து முன்னெடுக்கப்படும் பயணமாக இவருடைய செயல்களும், 'மீள்' ஆவணப்படமும் அமைந்திருக்கின்றன. விஷ்ணுப்ரியா அவர்களின் கனவு, 'அலட்சியமாக நாம் தூக்கி எறியும் ஒற்றை நெகிழிப்பை, யாரோ ஒரு குழந்தைக்குள் புற்றுநோயாக வளர்கிறது. நம் எல்லா விழிப்புணர்வும் இந்தப் புள்ளியை நோக்கி குவிய வேண்டும். கருவுக்கு நிகழும் இந்த அநீதியைத் தடுக்க வேண்டும். பிறக்காத குழந்தைக்காக எந்தச் சட்டம் வாதாடும்? எந்த நீதிமன்றம் தீர்ப்பளிக்கும்? இந்நிலையை மாற்றுவதற்கான சாதகச்சூழலை எப்படியாவது அடைந்தேதீர்வது அல்லது முதலடியைத் துவக்கிவைப்பது' என்பதாக உள்ளது.
2021ம் ஆண்டிற்கான மருத்துவர் ஜீவா நினைவு அறக்கட்டளை அளிக்கும் பசுமை விருது, தோழமை விஷ்ணுப்ரியா அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. மருத்துவர் ஜீவா விருதில், இளம்தலைமுறை ஆளுமை ஒருவருக்கு விருதளிக்கலாம் என முடிவானபொழுது, அதற்கான முதல்விருது, 'கழிவு மேலாண்மை' சார்ந்து பயணிக்கும் விஷ்ணுப்ரியா அவர்களுக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டது.
மருத்துவர் ஜீவா நினைவு பசுமை விருது பெறும் தோழமை விஷ்ணுப்ரியா உடனான நேர்காணல் இது. இதனை நன்முறையில் ஒளிப்பதிந்து இயக்கித்தந்த அய்யலு குமரன் அவர்களுக்கும், படத்தொகுப்பு வழியாக செழுமையாக்கிய அங்கமுத்து அவர்களுக்கும், கூட்டு ஒளிப்பதிவாளர் அருள்ராஜ் அவர்களுக்கும், நேர்காணலைத் நேர்த்தியோடு தொகுத்த ஆளுமை சித்ரா பாலசுப்ரமணியன் அவர்களுக்கும் எங்கள் அன்பின் நன்றிகள்!
~
மருத்துவர் ஜீவா அறக்கட்டளை
+91 98652 12020