Рет қаралды 412
#எம்மவர்இசைமழை
70- 80களில் எம்மவர்மெல்லிசைப் பாடல்கள்
இசைக் கலைஞராய் 70 - 80களில் பிரபலமாக அறியப்பட்டு, பாடகராய் இலைமறை காயாக இருந்து, இளவயதில் அவசரமாக இரசிகர்களிடமிருந்து விடைபெற்ற இன்னொருவர் சின்னையா நாகமுத்து வில்சன் எனும் “எம்மவர்” எஸ் என் வில்சன். யாழில் பிறந்து புறநகர் பகுதி வத்தளையை வாழ்விடமாக்கிக் கொண்டவர். தண்டர் ஸ்பார்க்ஸ். குழுவை நிர்வகித்து, குழுத்தலைவராக, பாடகராக, இசையமைப்பாளராக வழி நடாத்தியவர் அண்ணன் வில்சன்.
இலங்கையில் தமிழ். பொப் இசை கொடிகட்டி பறந்த காலத்தில் எஸ் என் வில்சனின் தண்டர் ஸ்பார்க்ஸ் (Wilson And The Thunder Sparks) தமிழ் இசைக்குழு இலங்கை இசை மேடைகளை அதிர வைத்து அந்நாள் இளையோரை தம் பக்கம் இழுத்த ஒரு இசைக் குழு. இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் இலங்கை வானொலி பிரபலங்கள், இசைக் குழுக்களை ஒருங்கினைத்து தயாரித்து வழங்கிய, அக்காலப் “பிரமாண்ட”. “பொப்பிசைப் புயல்” நிகழ்வில் climaxஆக மேடையேறிய வில்சனின் தண்டர் ஸ்பார்க்ஸ் ஏஈ மனோகரனுடன் மண்டபத்தை அதிரடியாக கலகலக்க வைத்தது இன்றும் மனதில் பசுமை.
வில்சன் இசையமைத்து தண்டர் ஸ்பார்க்ஸ் இசை வழங்க மனோகரன் பாடிய 'இலங்கை காகம்' உட்பட நான்கு பாடல்கள் ஒரே இரவில் ஏஈ மனோகரன் எனும் பாடகரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. 'காக்கா' மனோகரன், 'சுராங்கனி' மனோகரன், சிலோன் மனோகர் என்று ஏஈ மனோகரன் கொண்டாடப் பட்ட அளவிற்கு எஸ்என் வில்சன் கண்டுகொள்ளப் படாதது துரதிர்ஷ்டமே. பின்னாளில் மனோகரன் பாடிய பாடல்களில் பெரும்பான்மையானவை சிங்கள பாடல் Trackற்கு பாடிய பாடல்களாகவே இருந்தன. இங்கு அண்ணன் மனோகரனின் திறமையை குறை கூறும் எண்ணம் இல்லை.
J T Production சார்பில் இலங்கைப் பத்திரிகையாளர்கள் ஜெயசீலனும் தமிழ் நெஞ்சனும் சென்னையில் மேடையேற்றிய தமிழ் பொப் இசை நிகழ்வில் வில்சனுடன் தண்டர் ஸ்பார்க்ஸ் இசைவழங்க ஏஈ மனோகரனும் டோபல் இராகலும் பொப்பிசைப் பாடகர்களாக மேடையேறியது நினைவு. இந்திய வானொலியிலும் தண்டர் ஸ்பார்க்ஸ் இசை வழங்க வில்சன், இராகல் குரல்கள் ஒலித்தன. இந்நாள் போல் சமூக ஊடக பிரசித்தமில்லாத அந்நாளில் இந்நிகழ்வுகள் பெரிதாக வெளிவராமல் போனது. JTயின் "கீதா" பத்திரிகை மட்டும் இந்த விடயங்களை இலங்கை இரசிகர்கள் அறிய வெளியிட்டது.
எங்கள் கணிப்பு சரியெனில் இந்தியாவில் மேடையெறிய முதல் தமிழ் இசைக்குழுவாக வில்சனின் தண்டர் ஸ்பார்க்ஸ் இருக்க வேண்டும். ஆங்கில சிங்கள இசைக் குழுவான Jetliners 60களில் இந்திய மேடைகளை அலங்கரித்தது இசை இரசிகர்கள் அறிந்து இருப்பார்கள்.
பல இலங்கை கலைஞர்கள் எதிர் நோக்கிய பிரச்சினைகள் போலவே வில்சனும் தாயகம் விட்டு புலம் பெயர்ந்தார். இங்கிலாந்து மண்ணில் சில காலம் இசையை தொடர்ந்து அவசரமாய் விடை பெற்றார்.
வில்சனுடன் தண்டர் ஸ்பார்க்ஸ் குழுவில் இணைந்து பணியாற்றிய மகேந்திரன் ராஜசூரியர் , அன்றூ ஜெயசங்கர் , முகமது அமீர், பாபு ஜெயகாந்தன், பசல் ஜின்னா, முபாரக் இலியாஸ் போன்றவர்கள் இன்றும் இசையுடன் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்தால் மகிழ்வோம்.
இத்துடன் தரவேற்றம் செய்யும் பாடலை, எஸ் என் வில்சன் இசையமைத்துப் பாட அழகான பாடலை இயற்றியவர் திருகோணமலை வி எஸ் . மதியழகன். கவிஞர் ஒரு முதலிரவு நிகழ்வை உருவகப்படுத்தும் பாடலாக இயற்றியுள்ளார். பாடகராகவும் இசையமைப்பாளராகவும் வில்சன் தன் பங்கை மிக அருமையாக செய்திருக்கிறார்.
இ.ஒ.ப.கூல். இப்பாடல் ஒலிப்பதிவின் பின்னர் தண்டர் ஸ்பார்க்ஸ் குழுவைச் சந்தித்த மூத்த ஒலிபரப்பாளர் வி என் மதியழகன் தங்களுக்கு ஆசி கூறி வாழ்த்தியதை பின்னர் ஒரு சந்திப்பில் தண்டர்ஸ்பார்க்ஸ் கலைஞர்கள் நினைவு கூர்ந்து பெருமிதம் கொண்டார்கள்.
பாடலை தந்துதவியவர் நண்பர் பாபு ஜெயகாந்தன். பாபுவுக்கு நன்றிகள். ஒலிப்பதிவு தரத்தை இயன்றளவு செப்பனிட்டு தரவேற்றம் செய்துள்ளோம்.
குங்குமம் சந்தனம் சங்கமம் ஆனது
என் மனம் உன்னிடம் ஆசனம் தேடுது
காவியம் போலவே என் மனம் வாழுது
காதலை தேடியே காலமும் ஓடுது
ஓவியன் யாரவன் உன் முகம் தீட்டினான்
உன் முகம் கண்டதால் கம்பனும் பாடினான்
பாடியே களைத்தவன் வார்த்தையைத் தேடினான்
தேடிய வார்த்தையில் புதுமையைக் காட்டினான்
புதுவையின் பருவம் நீ நடமிடும் சிலையும் நீ
உன்னிடை மெல்லிடை பொன்னுடை தாங்குமா
தாங்கியே வந்து நீ நடையினை காட்டு நீ
தடை இனி ஏனம்மா தனிமையும் தாங்குமா
இசையமைத்து பாடியவர் - எஸ் என் வில்சன்
இயற்றியவர் - திருமலை வி எஸ் மதியழகன்