Рет қаралды 676
என்னைப் பாட வைத்த பாடல்
டங்ங்ங்... டங்ங்ங்... டங்ங்ங்...
செவியில் சுருதியை நிறைக்கும் மணியோசையில் எனக்கு எப்போதும் ஈர்ப்பு உண்டு.
அது மாதா கோவிலின் மணியோசையானாலும் சரி, பெருமாள் கோவிலின் மணியோசையானாலும் சரி!
என் மனத்துள் எப்பவும் ஓடும் ஸட்ஜத்தோடு ஒத்திசையும் மணியோசைகள் என்னைக் கவரும்.
அமைதியான சிற்றூர்ச் சூழலில் தொலைவிலிருந்து கேட்கும் மணியோசைகள் ரொம்பவும் அழகு!
ஆளரவமற்ற ரயில் நிலையத்தில் நடைமேடையின் ஒரு மூலையில் தண்டவாளத் துண்டில் அடிக்கும் ஓசை, பெருவெளி எங்கும் பரவிக் காதுகளை வருடுவதை உணர்ந்திருக்கிறீர்களா?
சில குரல்களும் மணியோசை மாதிரி இருக்கும்.
சின்ன வயசில் பலமுறை கேட்ட, இப்பவும் யாரென்றே தெரியாத அந்த ஊரின் பள்ளிவாசலில் யாரோ பாடிய பாங்கினோசை இன்னமும் மனத்துக்குள் மணியடிக்கிறது.
சில பாடகர்களின் குரலும் அப்படித்தான்.
வெண்கலக் குரல் என்பார்களே, அது மாதிரி.
தம்புராவுடன் இயைந்து பாடப் பலர் இருக்கின்றார்கள். கேட்கவும் அற்புதமாக இருக்கும்.
ஆனால் தம்புராவுடன் இணைந்து, மணிக்குரலில் பாடியவர் அவர் ஒருவர்தாம்.
அசரவைக்கும் அசரீரிக் குரல்!
வெண்ணெய் தடவிய வெண்கல மணியின் சுநாதமாய்ச் சுகமாகச் செவியில் அவர் பாடல்கள் நம்முள் இறங்கும்.
தமிழ்த் திரையிசையில் பல பாடல்கள் பாடியிருக்கிறார்!
எனக்கென்னமோ யாருக்கும் அவர் குரல் பொருத்தமாகத் தோன்றாது!
அபாரமான குரல் அவருடையது!
தனித்த வானையும் பிரபஞ்சத்தையும் வெளிப்படுத்தும் அசரீரிக் குரல் அவருடையது!
அவர்தாம் சீர்காழி கோவிந்தராஜன்!
சொந்தத் தறியில் நெய்த ஒற்றைப் பட்டுப் புடவை மாதிரி, சீர்காழியார் போல இன்னொரு குரல் இல்லை!
சாமி பாட்டானாலும், ஆசாமி பாட்டானாலும் கோவிந்தராஜனின் கோவில் மணிக் குரலில் கிரங்காதோர் உண்டோ!
தமிழ் மொழி ஒலிப்பில் வாத்தியார்களுக்கே வகுப்பு எடுப்பவர்!
அவரது பாடலை நானெல்லாம் பாடுவது என்பது, திருநெல்வேலி அல்வாவை வீட்டில் கிண்டிப் பார்க்கும் துணிச்சலே!
இருந்தும் சமைக்கத் தெரிந்த கையும் பாடத் தெரிந்த வாயும் சும்மா இருக்காதது மாதிரி, சும்மா ஒரு முயற்சி!
கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா கிடைக்கும் ஊரில்தான், நாட்டுக் கருப்பட்டியும் கிடைக்கிறது!
இருந்தும்,
இனித்த சர்க்கரைக்கும்
இலுப்பைப்பூச் சர்க்கரைக்கும்
இடைப்பட்ட இடத்தில் பாடியிருக்கிறேன் என்ற எண்ணம்!
ஒரு மணிக்கொரு மணி எதிர் எதிர் ஒலித்திடும் சீர்காழியார் பாடல் என் குரல் வழி...