சித்தர் சிவவாக்கியம் - 499 தீர்த்த லிங்க மூர்த்தியென்று தேடி ஓடும் தீதரே தீர்த்த லிங்க முள்ளில் நின்று சிவனைத் தெளியுமே தீர்த்தலிங்கம் உம்முளே தெளிந்து காண வல்லிரேல் தீர்த்தலிங்கம் தானதாய்ச் சிறந்ததே சிவாயமே. தீர்த்தம் தலம் மூர்த்தி என்றும் ஜோதிர்லிங்கம் என்றும் தேடி ஓடும் தீயை அறியாத பக்தர்களே! தீர்த்தமாகிய நீரையும் லிங்கமாகிய நெருப்பையும் ஒன்றாக்கி நின்று உலாவும் உயிரைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள். நீராகவும், லிங்கமாகவும் உமக்குள் உள்ள மெய்ப்பொருளை அறிந்து அதையே தெளிந்து தியானித்துக் கண்டு ஞானத்தில் வல்லவராகுங்கள். நீராகவும் லிங்கமாகவும் திகழும் அதுவே தான் என்ற ஞானமாகி சிறந்து இருப்பதுவே சிவம் என்பதை உணர்ந்து தியானியுங்கள்.